காத்மாண்டு,
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது. இதனால், சேதங்களை மதிப்பிடுவதிலும், குறிப்பாக ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கான மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த திடீர் வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள 'போடே கோஷி' (Bhote Koshi) ஆற்றில் கலந்தது; இது டிமுரே (Timure) மற்றும் சியாப்ரு பெசி (Syapru Besi) ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்து வருகின்றனர்; சேதத்தின் முழு அளவு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை.
நேபாள பிரதமர் பாலன் ஷா, வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை கூட்டினார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவரது அரசாங்கம் நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாள காவல்துறையை அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வெள்ளம் திரிசூலி ஆற்றுப் படுகைக்குள் கீழ்நோக்கி நகர்ந்துள்ளதால், நுவாகோட், தாடிங், கோர்கா மற்றும் சிட்வான் ஆகிய பகுதிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாக்மதி மாகாண (நேபாளம்) காவல்துறையின் தகவலின்படி, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 31-ஆக உயர்ந்துள்ளது; மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த பெருவெள்ளத்திற்கு பிறகு 105 இந்தியர்கள் உட்பட 384 வெளிநாட்டினர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.