உலக செய்திகள்

நேபாள வெள்ளம்: சடலங்களை தூக்கி சென்று நகைகளை திருடும் கொடூரம்: வீடியோ வெளியாகி அதிர்ச்சி

.விசாரணையின் அடிப்படையில், 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான 41 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

469 பேர் பலி

நேபாளம்-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 469 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க எத்தனையோ பேர், ஆதரவுக்கரம் நீட்டி வரும் நிலையில், உள்ளூரில் சிலர் சடலங்களில் இருந்து நகைகளை திருடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் உடல் திருட்டு

அந்த வீடியோவில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் நாராயணி ஆற்றில் கிடந்தது.அப்போது அங்கு சென்ற 2 பேர், மரப்பலகை மற்றும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உடலை கரைக்கு இழுத்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணின் இரு காதுகளிலும் இருந்த காதணிகளை அகற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கூடியிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

மனிதாபிமானமற்ற செயல்கள்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், நேபாள போலீசாரும் அந்த வீடியோவை மறுபதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.விசாரணையின் அடிப்படையில், 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இருவரையும் சிட்வான் போலீசார் பாரத்பூர் மாநகராட்சியின் போக்ரா பேருந்து நிலையம் அருகே கைது செய்தனர்.வெள்ளம் மற்றும் பேரிடர் சூழலில் பாதிக்கப்பட்டவர்களிடம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் எதையும் அனுமதிக்க முடியாது என்று நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.