நேபாள பிரதமர் பாலேந்திர ஷா  
உலக செய்திகள்

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா 22-ம் தேதி இந்தியா வருகை

கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி முதலில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

காத்மாண்டு:

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, 2 நாள் அரசு முறை பயணமாக வரும் நவம்பர் 22-ம் தேதி இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். கடந்த மார்ச் 27-ம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பாலேந்திர ஷா மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.இந்தப் பயணத்தின்போது பாலேந்திர ஷா தலைமையில் 34 பேர் கொண்ட குழு இந்தியா வருகிறது. இதில் நேபாள நிதி அமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பாலேந்திர ஷா சந்திக்க உள்ளார். மேலும், பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அவரைச் சந்தித்துப் பேச உள்ளார்.இந்தப் பேச்சுவார்த்தையில் ரெயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து இணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

முதல் பயணமாக இந்தியா

பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தனியாக வர்த்தகக் குழுவினரும் இந்தியா வருகின்றனர். 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நவம்பர் 23-ம் தேதி நேபாளம் திரும்புகிறார்.நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்கும் பிரதமர்கள் தங்களது முதல் அதிகாரப்பூர்வ இருதரப்புப் பயணமாக இந்தியா செல்வது நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி முதலில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT