உலக செய்திகள்

நெதர்லாந்து பயணம் நிறைவு; வருங்காலத்திற்கான லட்சிய செயல்திட்டம் வகுத்துள்ளோம் என பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவாக வளர்ச்சி பெறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

தி ஹேக்

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய வருகையை சிறப்பிக்கும் வகையில், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடனம், இசை நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டன.

இதன்பின்னர் இந்திய வம்சாவளியினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று காலம் முதல். தற்போது நடந்து வரும் உலக நாடுகளின் மோதல்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடி என தொடர்ச்சியாக உலகம் சவால்களை சந்தித்து வருகிறது என குறிப்பிட்டார்.

இந்த தசாப்தம், உலகத்திற்கான பேரிடருக்கான தசாப்தம் ஆகி விட்டது என்றும் இந்த சவால்கள் விரைவாக சரி செய்யப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், பல தசாப்தங்களாக செய்த சாதனைகள் அனைத்தும் காணாமல் போய் விடும். உலகில் பெருவாரியான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டார்.

21-ம் நூற்றாண்டில் வாய்ப்புகளுக்கான பூமியாக இந்தியா உள்ளது என குறிப்பிட்ட அவர், தொழில் நுட்பம் மற்றும் மனித மதிப்புகள் என இரண்டு வகையிலும், முன்னோக்கிய தேச பயணத்திற்கு அவை பெரும் பங்காற்றி வருகிறது என்றும் கூறினார். அதனுடன், இந்தியா எவ்வளவு பழமையான நாடாக இருந்ததோ அந்தளவுக்கு நவீனத்துவம் அடைந்து வருகிறது என்றும் கூறினார்.

இந்நிலையில், அவருடைய நெதர்லாந்து பயணம் இன்று நிறைவடைந்தது. இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், என்னுடைய நெதர்லாந்து நாட்டுக்கான பயணம் இரு நாடுகளுக்கான உறவில் புதிய உத்வேகம் ஏற்படுத்தி உள்ளது.

நம்முடைய உறவை மூலோபாய நட்புறவாக அது உயர்த்தி உள்ளதுடன், நீர்வளம், அரை கடத்திகள், புதிய கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, நீடித்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தி உள்ளோம்.

வருங்காலத்திற்கான உயர்ந்த இலக்கை கொண்ட செயல்திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளோம் என்று தன்னுடைய நெதர்லாந்து பயணம் பற்றி குறிப்பிட்டு உள்ளார். சிறந்த முறையில் வரவேற்று உபசரித்ததற்காகவும், என்னை வழியனுப்புவதற்காக தனிப்பட்ட முறையில் விமான நிலையம் வரை வந்ததற்காகவும் பிரதமர் ராப் ஜெட்டனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வரும் ஆண்டுகளிலும் இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவாக வளர்ச்சி பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது, பிரசித்தி பெற்ற ஆனைமங்களம் தாமிர தகடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த அரசாட்சிகளில் ஒன்றான, 11-ம் நூற்றாண்டு சோழ அரசாட்சி காலத்திலான இந்த கலை பொருட்கள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருந்தன. இந்த செப்பேடுகள் சோழர்களுடைய பெருமையை குறிப்பிடுவதுடன், புத்த மதத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவையும் பறைசாற்றும் வகையிலான முக்கிய ஆவணங்களாகும்.

30 கிலோ எடை கொண்ட, 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டு உள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழரின் முத்திரை உள்ளது. இந்த பதிவுகளின்படி 985 முதல் 1,014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகனான ராஜேந்திர சோழன் ஆகியோரின் காலத்தில், இவை உருவாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் கலாசார பாரம்பரிய மீட்பு முயற்சிகளில் கிடைத்த முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.