பியூனஸ் அயர்ஸ்,
பணகக்காரர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி! காசை கொட்டினால் போதும், அர்ஜென்டினா நாட்டின் குடியுரிமை தேடி வரும் என்ற புதிய திட்டத்தை அர்ஜென்டினா அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் அர்ஜென்டினா அரசு இந்த ‘தங்க பாஸ்போர்ட்’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ‘அர்ஜென்டினா வாரம்’ என்ற வணிக விழாவில், அந்நாட்டின் பொருளாதார மந்திரி லூயிஸ் கபுடோ மற்றும் அமைச்சரவை தலைவர் டியேகோ சாண்டில்லி ஆகியோர் இந்த புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டினர் அர்ஜென்டினா குடியுரிமை பெற இரண்டு வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அர்ஜென்டினா தேசிய கருவூலத்திற்கு திருப்பி செலுத்தப்படாத நிதியுதவியாக சுமார் ரூ.3.37 கோடி ($350,000 டாலர்) செலுத்த வேண்டும்.
அல்லது, அந்நாட்டின் அரசு பத்திரத்தில் சுமார் ரூ.7.70 கோடி ($800,000 டாலர்) முதலீடு செய்ய வேண்டும். இந்த பத்திர முதலீட்டை 7 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இந்த இரண்டில் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து அர்ஜென்டினாவின் குடியுரிமையை சுலபமாக பெற்றுவிடலாம்.
இதுமட்டுமின்றி, தனியாக மட்டுமில்லாமல் குடும்பத்தோடு செட்டிலாக நினைப்பவர்களுக்கும் இதில் தனித் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. முக்கிய விண்ணப்பதாரருடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளையும் சேர்த்து அழைத்து செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.