உலக செய்திகள்

நைஜீரியாவில் புதிதாக எபோலா தொற்று - உலக சுகாதார அமைப்பு

காங்கோவில் எபோலா பாதிப்புக்கு 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு உறுதி செய்துள்ளது.

அபுஜா

நைஜீரியாவில் புதிதாக எபோலா தொற்று பதிவாகி உள்ளது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் வரலாறு காணாத வகையில் எபோலா பாதிப்பு பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மே மாத மத்தியில் பரவ தொடங்கி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு சார்பில், உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பரவலுக்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.

உகாண்டா

இந்த சூழலில், நைஜீரியாவில் முதன்முறையாக பண்டிபக்யோ வைரசால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டறியப்பட்டு உள்ளார். இதுபற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், உகாண்டாவில் இருந்து நைஜீரியாவுக்கு பயணித்து வந்த பெண்ணுக்கு கடந்த 7-ந்தேதி அறிகுறிகள் தென்பட தொடங்கின.

அபுஜாவில் கடந்த 11-ந்தேதி இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டார். ஆய்வக முடிவில் நேற்று அவருக்கு தொற்று உறுதியானது. அவருடன் தொடர்புடைய 44 பேர் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

5-வது நாடு

கடந்த மே 15-ந்தேதி காங்கோவில் இந்த தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து, பிற நாடுகளிலும் தொற்று பதிவாகி உள்ளது. இதில், நைஜீரியா 5-வது நாடாகும்.

2014-2016 ஆண்டுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் நாடுகளில், எபோலா பரவலின்போது, 28,600 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, ஏற்பட்ட 2-வது கொடிய பரவலாக தற்போது காணப்படும் வைரசின் பரவல் உள்ளது.

4 ஆயிரம்

காங்கோவில் 7 மாகாணங்களில் பரவி 8,300 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு உறுதி செய்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். தொடர்ந்து கிழக்கு காங்கோவில் விரைவாக பரவி வருகிறது.

உலகிலேயே மிக கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்த கூடும். காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT