வாஷிங்டன்,
அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எச்-1பி விசா, மாணவர் விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உயர்கல்வியை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அங்குள்ள நிறுவனங்களில் குறிப்பிட்ட காலம் பணி பயிற்சி பெறுவதற்கு ஆப்சனல் பிராக்டிகல் டிரெயினிங் (OPT) என்ற திட்டம் உள்ளது.
எப்-1 விசா வைத்திருக்கும் மாணவர்கள், படிப்பின்போது வாரத்திற்கு 20 மணி நேரம் வரை பணிபுரிய முடியும். பட்டம் பெற்ற பிறகும் குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
தற்போது ஓ.பி.டி. திட்டத்திற்கு விண்ணப்பிக்க 500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.48 ஆயிரம்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தை 70 ஆயிரம் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.67 லட்சம்) உயர்த்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வெளிநாட்டு மாணவர் ஓ.பி.டி. திட்டத்தில் முதல் முறையாக சேர விண்ணப்பிக்கும் போது இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் 24 மாத பணி பயிற்சி நீட்டிப்புக்கும் மேலும் 30 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.29 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண நடவடிக்கைகள் மூலம் விசா முறைகேடுகளைத் தடுப்பது, குடியேற்ற அமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவது மற்றும் அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவை நோக்கமாக இருப்பதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், வேலை வழங்கும் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 31 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.