உலக செய்திகள்

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

விண்ணப்பதாரர்கள் சிலர் முறையற்ற வகையில் கூடுதல் சலுகைகளை பெறுவதாக புகார் எழுந்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்பவர்கள், தேவையான ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்காவிட்டால், அவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு, விண்ணப்பங்களில் குறைபாடுகள் இருந்தால் அதை சரிசெய்ய 12 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இனி, தகுதிக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சில விண்ணப்பதாரர்கள் முழுமையற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை முறையற்ற வகையில் பெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மற்றும் புதிய விண்ணப்பங்கள் அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.