வாஷிங்டன்,
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2-வது முறையாக பதவியேற்றதில் இருந்து, குடியேற்றம் மற்றும் விசா தொடர்பான விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் பெறும்போது, பெற்றோர் தங்களது உறவை நிரூபிப்பதுடன், புகைப்பட அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது. ஆனால், புதிய திட்டம் அமலுக்கு வந்தால், பெற்றோர் தங்களது அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தத்தின்படி, அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது அடிப்படை உரிமையாக உள்ளது. இந்த உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.