பெய்ஜிங்,
ராட்சத பாண்டா கரடியின் கழிவுகளில் இருந்து இதுவரை உலகிற்கு தெரியாத, முற்றிலும் புதிய வகை பூஞ்சை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர்.
சீன நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து நுண்ணுயிரியைப் பிரித்தெடுத்து ஆய்வு செய்தனர். இதன் இயற்பியல் பண்புகள் மற்றும் பல்வேறு வெப்பநிலைகளில் இது வளரும் விதம் ஆகியவற்றைச் சோதித்த விஞ்ஞானிகள், இறுதியாக இதன் டிஎன்ஏ மற்றும் ரிபோசோமால் மரபணுக்களை விரிவாக பகுப்பாய்வு செய்தனர். இந்த சோதனைகளின் முடிவில், இது ஏற்கனவே அறியப்பட்ட பூஞ்சை வகைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தாலும், அறிவியல் உலகிற்கு முற்றிலும் புதியதொரு தனி இனம் என்பது உறுதியானது. இதையடுத்து தற்போதைய நுண்ணுயிரியல் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்த பூஞ்சைக்கு 'மியூகர் மெலனோலியூகஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
'மியூகர் சாக்டர்னினஸ்' என்ற பூஞ்சையுடன் இது நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருந்தாலும், இதன் உடலமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் உள்ளன. இதன் வித்தகம் (வித்திகளை உருவாக்கும் பை போன்ற அமைப்பு) வழக்கத்தை விட சிறியதாகவும், ஆனால் அதன் மூலமாக உருவாகும் ஸ்போர்கள் மற்ற பூஞ்சைகளை விட பெரியதாகவும் காணப்படுகின்றன.
விலங்குகளின் கழிவுகள் மற்றும் மண்ணில் அழுகும் கரிமப் பொருட்களில் மனிதர்களால் இன்னும் கண்டறியப்படாத எத்தனையோ நுண்ணுயிரிகள் மறைந்துள்ளன என்பதை இந்த கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது. இந்த பூஞ்சையினால் மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா அல்லது மருத்துவத் துறையில் இதைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து அடுத்தகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.