புதிய பூனை இனம் 
உலக செய்திகள்

பொலிவியா காடுகளில் தென்பட்ட புதிய பூனை இனம்

டில்காயோ இனத்தில் இரண்டு பூனைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுக்ரே,

உலக அளவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் அடர்ந்த ஆண்டிஸ் மலைப்பகுதியில் உள்ள யங்காஸ் காடுகளில் இந்த விசித்திர பூனை கண்டறியப்பட்டுள்ளது.

மினி சிறுத்தை

உள்ளூர் மக்களால் செல்லமாக டில்காயோ என்று அழைக்கப்படும் இந்த காட்டுப்பூனைக்கு, விஞ்ஞானிகள் 'லியோபார்டஸ் டில்காயோ' எனப் பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு நம்மூர் வீட்டு பூனையை விட சிறியதாக, வெறும் 45 சென்டிமீட்டர் நீளமும், 1.4 கிலோ எடையும் மட்டுமே கொண்ட இந்த பூனையின் உடலில்... சிறுத்தையை போன்றே அடர்ந்த புள்ளிகளும், வரிகளும் காணப்படுகின்றன.

டி.என்.ஏ சோதனை

கடந்த 2016-ஆம் ஆண்டே இந்த பூனைக்குட்டி வனவிலங்கு சரணாலயம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டாலும், இதை சாதாரண பூனை இனம் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், உயிரியலாளர் பாவ்லா நோகலெஸ் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் நடத்திய மரபணு சோதனையில், இது மற்ற பூனை இனங்களை விட 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்த முற்றிலும் ஒரு புதிய இனம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

1923-க்கு பின் புதிய பூனை

இதற்கு முன்னதாக கடந்த 1923-ஆம் ஆண்டு உருகுவேயில் 'பாம்பாஸ்' என்ற காட்டுப்பூனை இனம் கண்டறியப்பட்டது. அதன்பின் ஒரு நூற்றாண்டு காலமாக புதிய பூனை இனம் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மினி 'டில்காயோ' பூனை, உலக இயற்கை ஆர்வலர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போதைக்கு இந்த இனத்தில் இரண்டு பூனைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT