வாஷிங்டன்,
உலகின் மிக மெல்லிய வானுயரக் கட்டிடங்களில் ஒன்றான நியூயார்க்கின் 'ஸ்டெய்ன்வே டவர்' கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சட்டவிரோதமாக ஏறிய 18 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் போர்ட்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் விவியன் வார்னாக் (வயது 18). இவர் கடந்த 16-ம் தேதி மாலை, நியூயார்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 1,428 அடி உயர ஸ்டெய்ன்வே டவர் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மாலை 5 மணியளவில், அக்கட்டிடத்தின் சுமார் 91-வது மாடிக்கு அருகே வெளிப்புறத்தில் அவர் ஆபத்தான முறையில் ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும் போலீசாரும், விவியனைப் பத்திரமாக மீட்டு மாலை 5:30 மணியளவில் கைது செய்தனர்.
போலீசார் விவியன் வார்னாக் மீது குற்றவியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்து மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவியன், தனது செயலுக்கு விநோதமான விளக்கம் அளித்தார்.
"நான் மிகவும் கெத்தாகவும், சுதந்திரமான மனப்பான்மை கொண்டவளாகவும் இருப்பதால் என்னைக் கைது செய்துவிட்டார்கள்; அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார். மேலும், அந்த உயரத்திலிருந்து நியூயார்க் நகரின் அழகை ரசிக்கவே மேலே ஏறியதாகவும் அவர் கூறினார்.
உலகின் மிக உயரமான குடியிருப்புக் கட்டிடங்களில் ஒன்றான ஸ்டெய்ன்வே டவரில் பாதுகாப்பை மீறிச் சென்ற இந்த சம்பவம் நியூயார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவியன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.