வாஷிங்டன்:
ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஈரானுடன் உடன்பாடு எட்டுவதா அல்லது ராணுவ நடவடிக்கையைத் தொடர்வதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா மீண்டும் நடத்தக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார். இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தப்போவது இல்லை” என்று கூறியுள்ளார்.
அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. 6 மாதங்களுக்கும் மேலாக ஈரான் - அமெரிக்கா சண்டை நீடித்து வரும் நிலையில் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்புக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் முயற்சி செய்து வருகின்றன. இருப்பினும், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பை டிரம்ப் முழுமையாக நிராகரிக்கவில்லை. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.