தெஹ்ரான்
மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வந்த போதிலும், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் வலைதள பதிவில் இன்று வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த 2 நாட்களாக மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மத்திய கிழக்கில் நம்முடைய பகைமைக்கு முற்றிலுமொரு தீர்வு காணப்பட உள்ளது.
இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன். நடந்து வரும் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார். இதில், கவனம் செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
டிரம்பின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் நாட்டின் அரசு ஊடகம் இன்று வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கையால் டிரம்ப் பின்வாங்கியுள்ளார் என்று செய்தி வெளியிட்டு உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்று டிரம்ப் விடுத்த 48 மணிநேர காலக்கெடு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வரும். அதன்பின்னர் ஈரானை கடுமையாக தாக்குவோம் என்று டிரம்ப் எச்சரித்திருந்த சூழலில், கூடுதலாக 5 நாட்களுக்கு காலக்கெடுவை நீட்டிப்பதற்கான அறிவிப்பை டிரம்ப் இன்று வெளியிட்டார்.
உலக நாடுகளின் பல்வேறு சரக்கு கப்பல்கள் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. எனினும், பரஸ்பர நட்பு அடிப்படையிலான நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கப்பல்களுக்கு ஈரானின் அனுமதி கிடைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.