தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும்.
அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார்.
இதுபற்றி பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி மொகாதம் கூறும்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறினார். நாங்கள் ஊடகங்கள் வழியே இதுபோன்ற விவரங்களை அறிந்தோம். ஆனால், என்னுடைய தகவலின்படி, இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே எந்தவித நேரடி பேச்சுவார்த்தையோ அல்லது மறைமுக பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என கூறினார்.
இந்த சட்டவிரோத தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பிலும் நட்பு நாடுகள் எப்போதும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது என்பது இயல்பானதே என்றும் பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் கூறினார்.
ஈரானும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டும் என கூறும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் சேர்ந்துள்ளது. அதன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று கூறும்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரிவான அளவில் தீர்வு ஏற்படும் வகையில், அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கம் வாய்ந்த பேச்சுவார்த்தையை எங்களுடைய நாட்டில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம் என கூறினார்.