டோக்கியோ,
வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் பெரியதாக சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இதன் மையப்புள்ளியின் ஆழம் 50 கிலோமீட்டராக இருந்தது என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொது ஒளிபரப்பு நிறுவனமான என்..எச்.கே. ஒளிபரப்பிய காணொளியில், ஹச்சினோஹே நகரில் போக்குவரத்து விளக்குகள் வழக்கம் போல் இயங்கியது. இயல்பான போக்குவரத்து காணப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, தோஹோகு ஷின்கான்சென் அதிவேக ரெயில் சேவைகள் உட்பட சில ரெயில்களை நிறுத்தியுள்ளதாக கிழக்கு ஜப்பான் ரெயில்வே தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான ஜப்பானில் நிலநடுக்கங்கள் சாதாரணமாக நிகழ்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவிலான உலகின் நிலநடுக்கங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஜப்பானில் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.