சீன உணவகம் 
உலக செய்திகள்

வார்த்தைகள் இல்லை, புன்னகைகள் மட்டுமே: சைகை மொழியில் இயங்கும் சீனத் தம்பதியின் உணவகம்!

வாடிக்கையாளர்களின் வசதிக்காக உணவகம் முழுவதும் சைகை மொழி விளக்கப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பெய்ஜிங்,

மத்திய சீனாவின் தையுவான் நகரில், செவித்திறன் குறைபாடு கொண்ட தம்பதியினர் நடத்தும் சிறிய உணவகம் ஒன்று, தனது மனிதநேயச் செயலால் உலகளவில் பலரது மனதைக் கவர்ந்துள்ளது.

பேசாமல் ஆர்டர் செய்யும் முறை

மத்திய சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரில் யின் யிங் மற்றும் அவரது கணவர் பெங் யாபின் ஆகிய இருவரும் 'சாவோஷான் டெப் சிஸ்டர்' என்ற உணவகத்தை நடத்தி வருகின்றனர். இங்கு வாடிக்கையாளர்கள் பேச வேண்டிய அவசியமின்றி, மெனு கார்டில் உள்ள உணவுகளைச் சுட்டிக்காட்டியோ அல்லது சைகைகள் மூலமாகவோ ஆர்டர் செய்கின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக உணவகம் முழுவதும் சைகை மொழி விளக்கப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

உலகளவில் வைரலான மனிதநேயம்

கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம், சமூக வலைதளப் பிரபலம் ஒருவர் இந்த உணவகத்திற்குச் சென்று தன்னிடம் பணம் இல்லை என கூறி இலவசமாக உணவு கேட்டார். சற்றும் தயங்காத அந்த தம்பதியினர், அவருக்கு சூடான உணவு வழங்கியதோடு, கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொடுத்து உதவினர். இந்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடரும் சமூக சேவை

ஏழை எளிய மக்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கு இந்த தம்பதியினர் தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். மேலும், செவித்திறன் குறைபாடு கொண்ட மற்றவர்களுக்கும் தங்கள் உணவகத்தில் வேலைவாய்ப்பு அளித்து முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

SCROLL FOR NEXT