பியாங்யாங்,
உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தலைமையில் அந்நாடு தொடர்ந்து அதிநவீன ஆயுதங்களைச் சோதித்து ஒட்டுமொத்த உலகிற்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. அந்த வகையில், தற்போது கடல்வழிப் போர்த்திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒரு புதிய அதிரடி சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு, இலக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வல்லமை படைத்த 'ஸாம்-2.0' என்ற புதிய நீர்மூழ்கிக் குண்டு (டார்பிடோ) அமைப்பை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 180-க்கும் மேற்பட்ட சோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட இதன் உந்துவிசை அமைப்பு இந்த சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியா மற்றும் ஜப்பானின் ஏவுகணைப் பாதுகாப்பு அரண்களை தகர்க்கும் நோக்கில், வடகொரியா தொடர்ந்து இத்தகைய அதிநவீன ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.