உலக செய்திகள்

சவுதியில் தூக்கிலிடப்பட்டவர்கள் கணவன்-மனைவி அல்ல: குடும்பத்தினர் புதிய தகவல்

இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டாக்கா,

சவுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த இளம்ஜோடி தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமண உறவு இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை

சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய வங்காளதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (வயது 22) மற்றும் ஸ்வீட்டி அக்தர் (25) ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்காவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு. கடந்த அக்டோபர் 14-ந்தேதி இளம் ஜோடியான இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வறுமையின் காரணமாக

சமூக வலைதளங்களில் இவர்கள் கணவன்-மனைவி என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவரது குடும்பத்தினரும் இதனை மறுத்துள்ளனர். நஸ்ருல் இஸ்லாமின் தந்தை அப்துல் பஷீர் கூறுகையில், வறுமையின் காரணமாகக் கடன் வாங்கித் தனது மகனைச் சவுதிக்கு அனுப்பியதாகவும், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

வங்காளதேச அரசு கண்டனம்

ஸ்வீட்டி அக்தரின் குடும்பத்தினர் கூறுகையில், ஸ்வீட்டிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும், அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தனர். நஸ்ருல் இஸ்லாமைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றும், ஸ்வீட்டி விரைவில் விடுதலையாவார் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, மரண தண்டனை குறித்துத் தூதரகம் மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததற்கு சவுதி அரசிடம் வங்காளதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டாக்காவில் உள்ள சவுதி தூதரை நேரில் அழைத்து வங்காளதேசம் விளக்கம் கேட்டுள்ளது.

சவுதி அரசின் இந்த நட​வடிக்கை மனித உரிமை செயற்​பாட்​டாளர்​களாலும், வங்​கதேச மக்​களாலும் கடுமையாக விமர்​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

SCROLL FOR NEXT