ஏஐ படம் 
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை 14 சதவீதத்தில் இருந்து 2 % ஆக குறைவு

கடந்த 1941ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அப்போது இந்தியாவுடன் இணைந்திருந்த தற்போதைய பாகிஸ்தான் நிலப்பரப்பில் ஹிந்துக்கள் எண்ணிக்கை, 14.60 சதவீதமாக இருந்தது

புதுடெல்லி,

பாகிஸ்தானில் இந்துக்கள் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களது சொத்துகள் பறிக்கப்படுவதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த 'இன்சைட் யு.கே.,' என்ற இந்துக்களுக்கு ஆதரவான அமைப்பு, பிரிட்டிஷ் இந்துக்களுக்கான அனைத்துக்கட்சி பார்லிமென்ட் குழுவிடம் நேற்று ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 1941-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அப்போது இந்தியாவுடன் இணைந்திருந்த தற்போதைய பாகிஸ்தான் பகுதிகளில் இந்துக்களின் எண்ணிக்கை 14.60 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

பூர்வீக சொத்துகள் பறிப்பு

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இந்து குடும்பங்கள், 'எதிரி சொத்து சட்டங்களின்' கீழ் தங்களது பூர்வீக நிலங்கள் மற்றும் பண்ணைகளை இழந்துள்ளன. இதனால், அந்த சமூகத்தினர் வறுமையில் தள்ளப்பட்டதுடன், நிரந்தரமாக இடம்பெயரும் நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

பெண்கள், சிறுமிகள் கடத்தல்

பாகிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். பின்னர் அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தியவர்களுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT