உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை பதவியில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் இருந்து வருகிறார்.
ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதுதொடர்பாக என்விடியா நிர்வாகக் குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்த நிலையில், தனக்குக் கீழ் பணியாற்றும் நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவரான கிம்பர்லி பவலுடனும் அவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இந்த தகவல் நிறுவனத்தில் பணியாற்றிய 5 பேரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அடுத்தடுத்த புகார்களைத் தொடர்ந்து, ஜென்சன் ஹுவாங்கை தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்குவது குறித்து என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆலோசித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.இதற்காக நிர்வாகக் குழு புதன்கிழமையே அவசரமாகக் கூடி, ஹுவாங்கின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கலாம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்துக்குப் பிறகு என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, தனது மனைவிக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், தனது செயல்களால் மனைவி மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் ஜென்சன் ஹுவாங் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.மேலும், வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பால் தான் குறிவைக்கப்பட்டாரா என்பது குறித்த விசாரணைக்கும் அவர் ஒத்துழைத்து வருகிறார். என்விடியா நிறுவனமும், சம்பந்தப்பட்ட பெண்களும் இந்த புதிய புகார்கள் குறித்து உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஜென்சன் ஹுவாங்கை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.