உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணை விலை 4 சதவீதம் அதிகரிப்பு

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும் அமெரிக்கா - ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சில மாதங்களாக போர் நடைபெற்றதால் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணை வினியோகம் தடைப்பட்டது. இதனையடுத்து சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் இந்தியாவிலும் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

அமைதி ஒப்பந்தம்

இந்தநிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணை அனுப்பப்பட்டது. அதன் மூலம் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கியதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும் அமெரிக்கா - ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதையடுத்து ஈரானுடன் அமைதி பேச்சு நடத்துவதில் எந்தவித பயனும் இல்லை என்று கூறி போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஆனாலும் அமைதி பேச்சுவார்த்தையை தொடருவதாகவும் தெரிவித்தார்.

போர் பதற்றம்

இந்தநிலையில் இரு தரப்பும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.

ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கி உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க -ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணை விலை

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணை ஏற்றி வரும் கப்பல்கள் தாக்கப்படக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால் கச்சா எண்ணை வினியோகம் தடைபட்டு உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணை இன்று 4.08 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 79.11 டாலராக உள்ளது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணை 4.11 சதவீதம் உயர்ந்து 74.36 டாலராக உள்ளது. கச்சா எண்ணை விலை கிடு கிடு வென உயர்ந்து பேரல் 79 டாலர்களை கடந்துள்ள நிலையில், ஈரான் விவகாரத்தில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் எண்ணை விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.