உலக செய்திகள்

பொது மன்னிப்பு திட்டம் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது: “ஓமனில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்திய தொழிலாளர்கள் வெளியேற வேண்டும்”: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

ஓமனில் பொது மன்னிப்பு திட்டம் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே ஓமனில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்திய தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

31-ந் தேதியுடன் நிறைவு

ஓமன் அரசின் தொழிலாளர் நலத்துறை ஓமன் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இந்த திட்டமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை பயன்படுத்தி டிசம்பர் மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.பின்னர் இந்த திட்டமானது மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக ஓமன் நாட்டில் தங்கியிருக்கும் இந்திய தொழிலாளர்கள் விரைவாக வெளியேற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நலத்துறை அனுமதி

இதன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் தொழிலாளர் நலத்துறை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து விபரம் தெரியாதவர்கள் அருகில் உள்ள இந்திய சங்கங்களின் உதவியை நாட வேண்டும். தொழிலாளர் நலத்துறையின் அனுமதி கிடைத்த பின்னர் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பாஸ்போர்ட் காலாவதியானவர்கள் பி.எல்.எஸ். மையங்களை அணுகி அதனை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.மஸ்கட் நகரை விட்டு தொலைவில் வசித்து வருபவர்கள் தங்களது விண்ணப்பங்களை சமூக நல ஊழியர்கள் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தேவையான அனுமதி வழங்கப்படும்.

இது குறித்து சந்தேகங்கள் எதுவும் இருந்தால் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக சொந்த நாட்டுக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.