உலக செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை?.. ஏ.ஐ. குறித்து ஜெப் பெசோஸ் கணிப்பு!

மக்கள் குறைவான நாட்கள் வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்துவதற்குத் தேவையான வருமானத்தைப் பெற முடியும் என ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், எதிர்காலத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை

அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறியதாவது:- செயற்கை நுண்ணறிவு மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். குறைந்த வளங்களைக் கொண்டு அதிக உற்பத்தியை மேற்கொள்ள முடியும். இதனால், மக்கள் குறைவான நாட்கள் வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்துவதற்குத் தேவையான வருமானத்தைப் பெற முடியும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமும் குறையலாம். விரும்பினால், குடும்பத்தில் ஒருவர் மட்டும் வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தும் நிலை உருவாகலாம். மக்கள் குறைவாக வேலை செய்ய விரும்பினால், நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியமர்த்துவதும் கடினமாகலாம். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், எதிர்காலத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கணிப்புகள்

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், எதிர்காலத்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் முறை வரலாம் என்றும், ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி டைமன், வாரத்தில் மூன்றரை நாட்கள் வேலை செய்யும் நிலை உருவாகலாம் என்றும் கணித்துள்ளனர்.

இவை எதிர்காலம் குறித்த கணிப்புகளே. செயற்கை நுண்ணறிவால் கிடைக்கும் உற்பத்தித் திறன் வளர்ச்சி, சம்பளம் மற்றும் வேலை நேரத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.

SCROLL FOR NEXT