உலக செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க எதிர்கட்சி தலைவர் ஆளுங்கட்சியுடன் பேச்சுவார்த்தை

புதிய அரசை அமைப்பதற்கு இஸ்ரேல் எதிர்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு வரும் டிசம்பர் 6-ந்தேதியுடன் முடிவடைகிறது.

இஸ்ரேலில் நெதன்யாகு இல்லாத ஆளுங்கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க எதிர்கட்சித் தலைவர் ஐசன்கோட் வியூகம் வகுத்துள்ளார். இதற்காக அவர் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பெரும்பான்மை இல்லை

இஸ்ரேலில் கடந்த அக்டோபரில் நடைபெற்ற 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்கள் எந்தவொரு கூட்டணிக்கும் கிடைக்கவில்லை.

நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 53 இடங்களையும், ஐசன்கோட்டின் எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றின. 19 இடங்களை வென்ற அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமைப்பதில் கூட்டணிக் கட் சிகளிடையே சிக்கல் நீடிப்பதால், லிகுட் கட்சியைத் தன் பக்கம் இழுக்க ஐசன்கோட் வியூகம் வகுத்துள்ளார்.

நெதன்யாகு இல்லாத கூட்டணி

அதன்படி புதிய அரசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட், பதவி விலகும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இல்லாத வகையில் அவரது 'லிகுட்' கட்சியைக் கூட்டணியில் இணைத்துப் பரந்த அளவிலான தேசிய ஒருமித்த அரசை அமைக்கத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது மையவாதக் கட்சியான 'யஷார்' தலைமையிலான புதிய அரசில் லிகுட் கட்சி இணைய வேண்டும் என்றும், ஆனால் எக்காரணம் கொண்டும் நெதன்யாகு பிரதமராகத் தொடரக் கூடாது என்றும் ஐசன்கோட் திட்டவட்டமாக நிபந்தனை விதித்துள்ளார்.

பேச்சுவார்த்தை

ஐசன்கோட்டின் இந்த 'நெதன்யாகு இல்லாத லிகுட் கூட்டணி' முயற்சிக்கு அவரது முக்கியக் கூட்டணித் தலைவரும் முன்னாள் பிரதமருமான நப்தலி பென்னட்டும் முழு ஆதரவு தெரிவித் துள்ளார். இது தொடர்பாக 'யஷார்' மற்றும் லிகுட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஹெர்ஸ்லியா நகரில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அடுத்த 4 ஆண்டுகாலப் பதவிக்காலத்திற்கும் தானே பிரதமராகத் தொடர வேண்டும் என்பதில் நெதன்யாகு பிடிவாதமாக உள்ளார். அத்துடன், அரபுக் கட்சிகளைத் தவிர்ப்பது. தனி பாலஸ்தீன நாடு அமைப்பதை எதிர்ப்பது. காசாவில் படைகளைத் தக்கவைப்பது உள்ளிட்ட 10 கடுமையான நிபந்தனைகளை லிகுட் கட்சி விதித்திருப்பதால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

டிசம்பர் 6-ந்தேதி கெடு முடிகிறது

புதிய அரசை அமைப்பதற்கு ஐசன்கோட்டுக்கு வழங்கப்பட்டுள்ள 28 நாள் காலக்கெடு வரும் டிசம்பர் 6-ந்தேதியுடன் முடிவடைகிறது என்பதால், லிகுட் கட்சியுடனான இந்தப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால், பெரும்பான்மை இல்லாத அரசை அமைத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரத் தயாராக இருப்பதாக ஐசன்கோட் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT