மாஸ்கோ
ரஷியா மீது நள்ளிரவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கனை கொண்டு நடந்த தாக்குதலில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
உக்ரைன் நாட்டுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகியும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில், ரஷியா மீது நள்ளிரவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கனை கொண்டு நடந்த தாக்குதலில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்கள் மாஸ்கோ நகரை நோக்கி ஏவப்பட்டன. எனினும், அவை முறியடிக்கப்பட்டு விட்டன என மேயர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறினார்.
இதில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள், 74 வயது முதியவர் மற்றும் 44 வயது பெண் என 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
எனினும், இதுபற்றி உக்ரைன் உடனடியாக எதுவும் கூறவில்லை. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.