உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு: 16 பேர் உயிரிழப்பு

ராவலகோட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டு, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், 16 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் 16 பேர் பலியாகியிருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராவலகோட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டு, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படைகளுடனான மோதல்களில் உயிரிழந்த 30 பேருக்கும், காயமடைந்த 200 பேருக்கும் நீதி கோரியும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில்தான், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கி சூட்டில் 46 பேர் கொல்லப்பட்டு இருப்பது சர்வதேச சமூகங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.