உலக செய்திகள்

பாகிஸ்தான்: எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் - 24 பேர் பலி

குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாடா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை குறிவைத்து பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை குவாடா நகரில் இருந்து பெஷாவருக்கு புறப்பட்டது. குவாடா நகரை கடந்து ஷம்பன் பதக் ரெயில் நிலையத்திற்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது.

ஷம்பன் பதக் ரெயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. மேலும், ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரெயில் நிலையம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்ததால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இஸ்லாமிய மதத்தினரின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பாகிஸ்தானில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் ஜாபர் எக்ஸ்பிரசில் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த நிலையில் அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேவேளை, குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SCROLL FOR NEXT