நியூயார்க்,
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேச உள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேச இருக்கும் சூழலில், பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை உலக நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில், நியூயார்க்கின் பரபரப்பான தெருக்களில், நூற்றுக்கணக்கான டிரக்குகள் டிஜிட்டல் விளம்பர பதாகைகளுடன் வலம் வந்தன. அந்த டிரக்குகளில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை குறித்த வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
அமெரிக்காவில் இருந்து செயல்படும் வாய்ஸ் ஆப் கராச்சி, அட்வோகேசி குழு ஆகிய அமைப்புகள் இந்த பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன. பாகிஸ்தானில் அரசு ஊக்குவிக்கும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐநா பொது செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ்க்கு வாய்ஸ் ஆப் கராச்சி என்ற அமைப்பு கடிதமும் எழுதியுள்ளது.