பீஜிங்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் லி குவியாங்கின் அழைப்பையேற்று அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லி குவியாங்கை சந்தித்து பேசுகிறார்.
இதனை முன்னிட்டு சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறும்போது, அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருவரும், இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான விசயங்கள் பற்றிய பார்வைகளை பரிமாறி கொள்ள உள்ளனர் என்றார்.
இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்காக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரிக்கு, சீன அதிபர் ஜின்பிங் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்த நட்புறவானது தொடர்ந்து, எப்போதும் உறுதியாகவும், முறிக்க முடியாத ஒன்றாகவும் இருந்து வருகிறது என்று ஜின்பிங் குறிப்பிட்டார்.
அவருடைய பயணம், இரு நாடுகளிடையே உயர்மட்ட விசயங்களை பரிமாறி கொள்ள கூடிய வகையில் அமைந்திருக்கும். இரு தரப்பும், பெரிய சர்வதேச மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில், நெருங்கிய தகவல் தொடர்பும், ஒருங்கிணைப்பும் கொண்டுள்ளன. தங்களுடைய பொது நலன்களை திறமையாக பாதுகாத்து வந்துள்ளன. பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவித்தும் வந்துள்ளன என்று குவோ கூறினார்.