கராச்சி
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சீனாவுக்கு வருகை தரும்படி அந்நாட்டு பிரதமர் லி குவியாங் அழைப்பு விடுத்த நிலையில், அதனையேற்று ஷெரீப் இன்று சீனாவின் ஹாங்ஜவ் நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர், 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பொருளாதார ஒத்துழைப்பில் விரிவாக்கம், கூட்டாண்மை உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இந்த பயணம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பயணத்தில், அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லி குவியாங்கை சந்தித்து பேசுகிறார். அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருவரும், இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான விசயங்கள் பற்றிய பார்வைகளை பரிமாறி கொள்ள உள்ளனர் என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியுள்ளார்.
அவருடைய பயணம், இரு நாடுகளிடையே உயர்மட்ட விசயங்களை பரிமாறி கொள்ள கூடிய வகையில் அமைந்திருக்கும். இரு தரப்பும், பெரிய சர்வதேச மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில், நெருங்கிய தகவல் தொடர்பும், ஒருங்கிணைப்பும் கொண்டுள்ளன. தங்களுடைய பொது நலன்களை திறமையாக பாதுகாத்து வந்துள்ளன. பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவித்தும் வந்துள்ளன என்று குவோ கூறினார்.