உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கொடூரத் தாக்குதல்: ரஷித் கான் வேதனை

காபுலில் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 250ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அவ்வப்போது இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 250ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என தாலிபான் அரசு குற்ற சாட்டு வருகிறது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. தீவிரவாத செயல்பாடுகள் நடக்கும் இடங்களையே தாக்கியதாகவும் மருத்துவமனைகளை தாக்கவில்லை எனவும் பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதல் வேதனையளிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;

“இந்தக் கொடூரமான செயலை முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்களைப் பொறுப்பேற்கச் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் துணையாக நிற்கிறேன். நாம் இந்த காயங்களிலிருந்து குணமடைந்து, ஒரு தேசமாக மீண்டும் எழுவோம். இன்ஷா அல்லாஹ்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.