தெஹ்ரான்
ஹார்மூஸ் ஜலசந்தியில் 24 மணிநேரத்தில் 7 கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்து உள்ளன என ஈரான் கடற்படை தெரிவித்து உள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. இதில், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தியது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலில் இருதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
எனினும், ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை யார் நிர்வகிப்பது? என்பதில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இரு தரப்பும் இந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.
இதனை தொடர்ந்து, எங்களுடைய அனுமதியின்றி கப்பல்கள் செல்ல முடியாது என ஈரான் அறிவித்தது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்போ இந்த பகுதியை முழு அளவில் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம் என கூறினார்.
இதனால், ஜலசந்தி வழியே செல்லும் கப்பல்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனுடன், அந்த பகுதியில் கண்ணிவெடிகளும் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றால் கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, ஈரான் கடற்படை எச்சரிக்கை விடுத்தது.
எங்களுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படாமல், நீர்வழியில் செல்ல முயற்சிக்க வேண்டாம். நாங்கள் ஏற்பாடு செய்த பகுதியின் வழியே கப்பல்கள் செல்லவும் என எச்சரித்தது.
இந்நிலையில், பனாமா கொடியுடன் கூடிய சமையல் கியாஸ் ஏற்றி வந்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியது. அந்த கப்பலில் 24 இந்தியர்கள் உள்பட 25 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதுபற்றி மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி துறைக்கான மந்திரி சர்பானந்தா சோனாவால் இன்று கூறும்போது, இதில் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலைமையை அதிகாரிகள் உற்று நோக்கி வருகிறார்கள்.
கப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்தினருடன் பேசி, இந்திய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், அவர்களின் நலனை கவனத்தில் கொள்ளும்படியும் கூறியுள்ளோம் என்றார்.
இந்த பகுதியில், கடந்த 24 மணிநேரத்தில் 4 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்துள்ளன என்று ஈரானிய கடற்படை தெரிவித்து உள்ளது.