உலக செய்திகள்

ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்'

ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு திரைப்படம் என்ற பெருமையை பெற்று 'பாராசைட்' படம் வரலாறு படைத்து உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. கடந்த ஆண்டு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் நடந்ததால் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது முதலில் அறிவிக்கப்பட்டது. 'ஒன்ஸ் அபான் எ டைம்... இன் ஹாலிவுட்' என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான விருது வென்றார். இதேபோன்று மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்த லாரா டெர்ன் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

ஜோக்கர் (JOKER) படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருது வென்றார். இதேபோன்று ஜூடி (JUDY) படத்தில் நடித்த ரெனீ ஜெல்வெஜெர் சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார்.

பாம்ப்ஷெல் திரைப்படம் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது வென்றது. 1917 என்ற படத்திற்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு சிறந்த ஒலி கலவை என 3 விருதுகள் கிடைத்து உள்ளன. சிறந்த ஒலி தொகுப்பு போர்டு வெர்சஸ் பெராரி (FORD V FERRARI) படம் பெற்றுள்ளது.

இந்த விழாவில், பாராசைட் படம் 4 விருதுகள், 1917 படம் 3 விருதுகள், ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹாலிவுட் படம் 2 விருதுகள், போர்டு வெர்சஸ் பெராரி படம் 2 விருதுகள், ஜோக்கர் படம் 2 விருதுகளை வென்றுள்ளன.

இதில், பாராசைட் தென்கொரிய மொழியில் உருவான முதல் வெளிநாட்டு திரைப்படம் ஆகும். இப்படத்தில் சாங் காங்-ஹோ, லீ சன்-கியூன், சோ யியோ-ஜியோங், சோய் வூ-ஷிக் மற்றும் பார்க் சோ-டேம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

6 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் சிறந்த திரைக்கதை, சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படம் ஆகிய 4 விருதுகளை வென்றுள்ளது. இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டு இருந்தது.