வாஷிங்டன்,
அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இதில் 14 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை 60 நாட்களில் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையடுத்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமெரிக்கா-ஈரான் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று சிக்கல் ஏற்பட்டது.ஒப்பந்தத்தில் முதல் விதியாக லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தியது.
இதனால் அதிருப்தி அடைந்த ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல இருந்த தனது பயணத்தை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ரத்து செய்தார்.ஈரான் தனது தூதுக்குழுவை சுவிட்சர்லாந்துக்கு அனுப்புவதற்கு முன் லெபனானில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கிடையே பேச்சுவார்த்தை தொடங்குவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க அமெரிக்காவும், கத்தாரும் நடவடிக்கை எடுத்தன. இதில் இஸ்ரேல் ராணுவம்-லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தம் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல்-லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுக்கான ஏற்பாடுகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மும்முரமாக நடந்து வருகின்றன.அதன்படி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டுள்ளார். ஏற்கனவே டிரம்பின் மூத்த ஆலோசகரும், அவரது மருமகனுமான ஜாரெட் குஷ்னர் சுவிட்சர்லாந்தில் தான் இருக்கிறார். அவரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.அதேபோல் பேச்சுவார்த்தைக்காக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி இன்று சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் அமெரிக்கா-ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜெனீவாவில் அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்குகிறது. இதில் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே ஈரான் வெளியுறவுத்துறை துணை மந்திரி கூறும்போது, அமைதி பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பதை அமெரிக்கா நிரூபிக்க வேண்டும் என்றார்