காத்மாண்டு,
திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்ச ரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண், சேறு-சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது.
இதில் சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கா னோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 2-வது வாரமாக நேபாளத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்களை நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு வருகிறார்கள். நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது. போடே கோஷி மற்றும் திரிசூலி நதிப் படுகைகளில் உள்ள 11 நீர்மின் திட்டப்பகுதிகளில் பணியாற்றிய 894 பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
இவர்களில் சுமார் 500 பேர் சுரங்கங்களில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புத்துறையினர் சுரங்கங்களுள் களம் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் நேபாளத்தில் கிழக்கு, மத்தி மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ள அபாயத்தை குறித்து ஆற்றங்கரையோர மக்களுக்கு மீண்டும் புதிய வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதிகளின் நிலையைக் கண்காணிக்க ரசுவா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாலைகள் சேதமடைந்ததால் காத்மாண்டுவை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவழிப் போக்குவரத்து அமல்படுத்தப் பட்டுள்ளது. கோஷி, நாராயணி, பாக்மதி, மகாகாளி உள்ளிட்ட நதிகள் மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர்மட்டமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடும் பாதிப்படைந்த ரசுவா மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு களச் சூழல் குறித்து உடனுக்குடன் ஆய்வு நடத்தப்படுகிறது.