லிமா,
எல் நினோ (El Niño) என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அசாதாரணமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது.
பூமத்திய ரேகையை ஒட்டி கிழக்கிலிருந்து மேற்காக வீசும் வர்த்தகக் காற்று (Trade winds) வலுவிழக்கும் போது இந்நிலை உருவாகிறது. இதனால், தென் அமெரிக்காவின் பெரு (Peru) கடற்கரைப் பகுதியில் வழக்கமாக மேலே எழும்பும் குளிர்ந்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர் தடைபடுகிறது.
எல் நினோ உலகெங்கிலும் உள்ள வானிலை முறைகளை கடுமையாக மாற்றியமைக்கும். இது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் வறட்சியை ஏற்படுத்தலாம். அதே சமயம், அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எல் நினோ மாற்றத்தால் அதி கனமழை பொழியும் ஆபத்து காரணமாக, பெரு நாட்டின் 40 சதவீத மாவட்டங்களில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 796 மாவட்டங்களில் இந்த உத்தரவு 60 நாட்கள் அமலில் இருக்கும் என்றும், உடனடி முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும் என்றும் பெரு அரசு தெரிவித்துள்ளது.