உலக செய்திகள்

செல்ல பிராணிகளுக்கு உணவளிக்கும் எந்திரம்: துபாய் மாநகராட்சி ஏற்பாடு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த எந்திரத்தில் மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொள்ள வசதி உள்ளது.

துபாய்,

செல்ல பிராணிகளுக்கு உணவளிக்கும் வகையில் துபாயில் மாநகராட்சி சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய ‘இஹ்சான்' என்ற எந்திரம் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் தெருக்களில் நாய்களை பார்த்திருப்போம். ஆனால் அமீரகத்தில் தெரு நாய்கள் கிடையாது. அதற்கு பதிலாக தெரு பூனைகளை நிறைய காண முடியும். வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் உள்ளது. ஆனால் இந்த நாட்டு பூனைகளுக்கு தெருக்களே வீடுகளாக உள்ளன. பெரும்பாலும் துபாயை பொறுத்தவரையில் குடியிருப்பு கட்டிடங்கள், கடைகள், பூங்கா போன்ற பகுதிகளில் பூனைகள் தங்கள் வாழிடங்களை அமைத்துக் கொள்கின்றன.

ஒரு சில ஆர்வலர்கள் தெரு பூனைகளை தேடிச்சென்று உணவளித்து வருவதை காண முடிகிறது. அதிலும் காரில் சென்று கூட பூனைகளுக்கு உணவளிக்கின்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பூனைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தி துபாய் மாநகராட்சி சார்பில் இஹ்சான் என்ற நவீன உணவளிக்கும் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த எந்திரத்தில் மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொள்ள வசதி உள்ளது. ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலை அந்த எந்திரத்திற்குள் செலுத்தினால், அதனை சரிபார்த்து மறுசுழற்சி செய்ய உள்ளே எடுத்துக்கொள்கிறது.

அதற்கு பதிலாக எந்திரத்தின் கீழ்புறம் தட்டில் பூனைக்கான உணவு கொட்டுகிறது. இவ்வாறு பிளாஸ்டிக் பாட்டில்களை போட, போட உணவு கொட்டிக்கொண்டே இருக்கும். இது அங்கு உலாவும் பூனைகளுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்ய பயனுள்ளதாக உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தூக்கி எரியப்படாமல் மறுசுழற்சிக்கும் பெறப்படுகிறது.

இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மொத்தம் 12 நவீன இஹ்சான் எந்திரங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

அதேபோல 10 எந்திரங்கள் துபாய் மாநகராட்சி பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2 எந்திரங்கள் துபாய் ஹோல்டிங் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் நோயால் பாதிக்கப்பட்ட பூனைகள் மாநகராட்சி ஊழியர்களால் எடுத்து செல்லப்பட்டு அவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. மேலும் பூனைகளுக்கு தெருப்பூசி போடும் பணியையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.