வாஷிங்டன்
இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி, அமெரிக்க நிறுவனங்களுக்கு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
2026-ம் ஆண்டுக்கான ஜி20 தலைமையை அமெரிக்கா ஏற்றுள்ளது. பொருளாதார கொள்கையை பற்றி ஆலோசிப்பது மற்றும் ஒருங்கிணைப்பது தொடர்பாக உலகின் மிகப்பெரிய நவீன மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை ஒன்றாக இணைக்கும் சர்வதேச அமைப்பாக ஜி20 செயல்படுகிறது.
20 நாடுகளை ஒரு குழுவாக கொண்டு செயல்படும் இதில், சீனா, கனடா, பிரேசில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாகீ நகரில் ஜி20 வர்த்தக மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் இந்தியா சார்பில் வர்த்தக பிரதிநிதியாக பங்கேற்பதற்காக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், அந்நாட்டின் சிகாகோ நகருக்கு நேற்று சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர், ஜி20 வர்த்தக மந்திரிகள் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த தேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் வட்டமேஜை வர்த்தக கூட்டத்தில் பங்கேற்றார். இதில் அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி ஜேமீசன் கிரீரும் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி கோயல், இந்தியாவில் அமெரிக்க உற்பத்தியாளர்கள் முதலீடு மேற்கொள்ள வாருங்கள். எங்களுடைய நாட்டில் வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி, உங்களுடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துங்கள். சிறு மற்றும் நடுத்தர இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுங்கள்.
இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கு மதிப்பு ஏற்படுத்தும் வகையில், வினியோக சங்கிலிகளை உறுதியாக கட்டமைக்க, நவீன தயாரிப்பில் துணை முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.