உலக செய்திகள்

அடுத்த ஆண்டு பெரிய வர்த்தக குழுவுடன் அமெரிக்கா செல்ல திட்டம்: பியூஷ் கோயல்

உண்மையில், இந்த முறையே பெரிய அளவிலான வர்த்தக குழுவினரை அழைத்து வர திட்டமிட்டு இருந்தேன் என்றார்.

வாஷிங்டன்

அமெரிக்காவுக்கு அடுத்த ஆண்டு பெரிய வர்த்தக குழுவை அழைத்து செல்லும் திட்டம் உள்ளது என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

2026-ம் ஆண்டுக்கான ஜி20 தலைமையை அமெரிக்கா ஏற்றுள்ளது. பொருளாதார கொள்கையை பற்றி ஆலோசிப்பது மற்றும் ஒருங்கிணைப்பது தொடர்பாக உலகின் மிகப்பெரிய நவீன மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை ஒன்றாக இணைக்கும் சர்வதேச அமைப்பாக ஜி20 செயல்படுகிறது.

20 நாடுகளை ஒரு குழுவாக கொண்டு செயல்படும் இதில், சீனா, கனடா, பிரேசில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

மத்திய மந்திரி கோயல்

இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாகீ நகரில் ஜி20 வர்த்தக மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் வர்த்தக பிரதிநிதியாக பங்கேற்பதற்காக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், அந்நாட்டின் சிகாகோ நகருக்கு சென்றுள்ளார்.

அவர், ஜி20 வர்த்தக மந்திரிகள் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த தேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் வட்டமேஜை வர்த்தக கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி ஜேமீசன் கிரீரும் கலந்து கொண்டார்.

இந்தியாவில் முதலீடு

அப்போது கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி கோயல், இந்தியாவில் அமெரிக்க உற்பத்தியாளர்கள் முதலீடு மேற்கொள்ள வாருங்கள். எங்களுடைய நாட்டில் வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி, உங்களுடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துங்கள். சிறு மற்றும் நடுத்தர இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுங்கள்.

இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கு மதிப்பு ஏற்படுத்தும் வகையில், வினியோக சங்கிலிகளை உறுதியாக கட்டமைக்க, நவீன தயாரிப்பில் துணை முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.

வர்த்தக மந்திரிகள்

தொடர்ந்து நடந்து வரும் கூட்டத்துக்கு இடையே 4 நாடுகளின் வர்த்தக மந்திரிகளை அவர் தனித்தனியாக சந்தித்து பேசினார். இதில், பிரான்ஸ் நாட்டு வர்த்தக மந்திரி நிகோலாஸ் பாரிசியரை சந்தித்தபோது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

கனடா மந்திரி மணிந்தர் சித்துவை சந்தித்த பியூஷ் கோயல், அந்த நாட்டுடனான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார்.

வர்த்தக குழு

சவுதி அரேபியா மந்திரி மஜித் பின் அப்துல்லா அல்-கசாபி, தென்கொரியா மந்திரி பார்க் ஜங்-சங் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய-அமெரிக்க சமூக அறக்கட்டளை சார்பில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், இந்தியர்களும், அமெரிக்கர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் கோயல் உரையாடினார். அப்போது அவர், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் இருந்து பல துறைகளை சேர்ந்த அதிக அளவிலான வர்த்தக குழுவினரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லும் திட்டம் உள்ளது என்றார். உண்மையில், இந்த முறையே பெரிய அளவிலான வர்த்தக குழுவினரை அழைத்து வர திட்டமிட்டு இருந்தேன். ஆனால், ஜி20-க்காக பரபரப்பாக செயல்பட வேண்டி இருந்தது. அதனால் அழைத்து வரவில்லை என்றார்.

SCROLL FOR NEXT