உலக செய்திகள்

அமெரிக்கா: விமானம் தரையில் விழுந்து விபத்து - 5 பேர் பலி

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அமரிலொ நகரில் இருந்து நியூ பிரன்பில்ஸ் நகருக்கு நேற்று இரவு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், டெக்சாசின் விம்பர்லி பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. வனப்பகுதியில் விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தில் பிக்கில்பால் (pickleball) விளையாட்டு வீரர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 5 பேரும் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.