டொமினிகன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முயன்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்தனர். விமானத்தில் விமானிகளை தவிர வேறு பயணிகளோ அல்லது பணியாளர்களோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கல்ப்ஸ்ட்ரீம் ஜி-200 ரக தனியார் விமானம் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. அப்போது லா ரோமானா விமான நிலையத்திற்கு தென்மேற்கே சுமார் 16 மைல் தொலைவில் பறந்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானக் குழுவினர் அவசர நிலையை அறிவித்து மீண்டும் லா ரோமானா விமான நிலையத்திற்குத் திரும்பினர். ஆனால் தரையிறக்க முயற்சியின்போது விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறியது.விபத்துக்கான காரணத்தை கண்டறியவிசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டொமினிகன் குடியரசின் குடிமை விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விபத்து தொடர்பாக அனைத்து அவசர நடைமுறைகளும் உடனடியாக செயல்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிய தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணை முன்னேற்றத்தின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் பிராந்தியத்தில் அமைந்துள்ள 1.16 கோடி மக்கள் தொகை கொண்ட டொமினிகன் குடியரசின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இங்கு தனியார் விமானங்களில் பெரும் பணக்காரர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். முன்னதாக, 2021-ம் ஆண்டில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.