மணிலா,
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ‘ஆசியான்’ கூட்டமைப்பில், 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு, பிராந்திய வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் வகிப்பதால், அதன் தலைநகர் மணிலாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி, இன்று(16-ந்தேதி) பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.
பிலிப்பைன்ஸ் செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிப்பதற்கு கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஒரு முக்கிய தளத்தை வழங்கும் என்றும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆசியான் அமைப்பு நடத்தும் 23-வது ஆசியான்-இந்தியா மாநாடு, 21-வது ஆசியான்-கிழக்காசிய மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். ஆசியான் மாநாட்டில் இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் வர்த்தகம், பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1967-ல் நிறுவப்பட்ட ‘ஆசியான்’ கூட்டமைப்பு, கிழக்கு பிராந்தியத்தின் செல்வாக்குமிக்க அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்டே மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆசியான் உறுப்பு நாடுகளைத் தவிர, கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.