உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தலைமைத்துவத்தைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹாரிசான்' என்ற செஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

விக்டோரியா,

பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக செசல்ஸ் தீவு நாட்டுக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். செசல்சின் தேசிய தாவரவியல் பூங்காவுக்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரோந்து கப்பல், செசல்ஸ் கடலோர காவல் படைக்கு அன்பளிப்பாக வழங்கும் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். அப்போது எஸ்போயர் என்ற ரோந்து கப்பல் மற்றும் 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 10 கார்கள், 5 லேசர் ரேடியல் படகுகள் ஆகியவற்றை செசல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியிடம் மோடி வழங்கினார்.

பேச்சுவார்த்தை

செசல்ஸ் நாட்டு பயணத்தின் 2-ம் நாளான இன்று செசல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக செசல்சில் உள்ள அரசு இல்லத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மோடியை அதிபர் பேட்ரிக் ஹெர்மினி வரவேற்றார். பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் கடல்சார் பாதுகாப்பு, இந்தியாவின் பொருளாதார ஆதரவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசித்தனர்.

உயரிய விருது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தலைமைத்துவத்தைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹாரிசான்' என்ற செஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள செசல்ஸ் நாட்டின் 50-வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் மாஹே தீவின் புகழ் பெற்ற நவசக்தி விநாயகர் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று தரிசனம் செய்ய உள்ளார். 1992-ம் ஆண்டு செசல்ஸ் இந்து கோவில் சங்கத்தால் கட்டப்பட்ட இந்த கோவில் செசல்ஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரே தமிழ் இந்து கோவில் ஆகும்.