ரோம்
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். தொடர்ந்து, நெதர்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். இதில், நெதர்லாந்துக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
தொடர்ந்து, சுவீடன் நாட்டுக்கு சென்ற அவர், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களையும், சுவீடனின் தலைமை செயலதிகாரிகளையும் சந்தித்து, வர்த்தகம், முதலீட்டை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆலோசனைகளில் ஈடுபட்டார். சுவீடன் பயணம் நிறைவடைந்ததும், பிரதமர் மோடி நார்வே நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது, நார்வேயின் உயரிய கவுரவம் என கூறப்படும் கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வீஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. நார்வே 5-ம் அரசர் ஹரால்டு இதனை வழங்கினார். இரு நாடுகளுக்கு இடையே புவிஅரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான முக்கிய நடவடிக்கையாக பிரதமர் மோடியின் இந்த பயணம் பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து, இத்தாலி நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை விமான நிலையத்தில் அந்த நாட்டின் துணை பிரதமர் ஆன்டனியோ தஜானி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் தலைநகரான ரோம் நகரில், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில், இந்திய வம்சாவளியினரை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதன்பின்னர் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மெலோனிக்கு மெலோடி சாக்லேட்டுகள் கொண்ட பாக்கெட் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். இதுபற்றி மெலோனி வெளியிட்டு உள்ள வீடியோவில், எனக்கு பிரதமர் மோடி ஒரு பரிசை கொண்டு வந்துள்ளார்.
அது, மிக மிக சிறந்த மெலோடி டாபீ. இந்த பரிசுக்காக உங்களுக்கு நன்றி என கூறியுள்ளார். அந்த வீடியோவில், மெலோடி சாக்லேட்டை பார்த்து மெலோடி என நகைச்சுவையாக குறிப்பிட்டார். அப்போது பிரதமர் மோடி மற்றும் மெலோனி இருவரும் பலத்த சத்தத்துடன் சிரிப்பை வெளிப்படுத்தினர்.
2023-ம் ஆண்டு துபாயில் நடந்த பருவநிலை மாநாட்டின்போது, மோடி மற்றும் மெலோனி ஆகிய இரண்டு பெயர்களையும் இணைத்து, மெலோடி என்று மெலோனி குறிப்பிட்டார். பின்னர், அந்த பெயர் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. மெலோடி என்ற ஹேஷ்டேக்கும் பிரபலமடைந்தது.
நல்ல நண்பர்கள் என குறிப்பிட்டு, பிரதமர் மோடியுடன் ஒன்றாக நிற்கும் படம் ஒன்றையும் மெலோனி அப்போது வெளியிட்டார். இத்தாலி பயணத்தில் இரு நாடுகளின் வர்த்தகம், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விசயங்கள் பற்றி இத்தாலி நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.