ஆஸ்லோ
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. அவருடைய நெதர்லாந்து பயணம் நேற்று நிறைவடைந்ததும் சுவீடன் நாட்டுக்கு புறப்பட்டார்.
சுவீடனில் பிரதமர் மோடியை அந்நாட்டு அரசியல் மற்றும் வணிக தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த பயணத்தில், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களையும், சுவீடனின் தலைமை செயலதிகாரிகளையும் சந்தித்து, வர்த்தகம், முதலீட்டை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆலோசனைகளில் ஈடுபட்டார். சுவீடன் பயணம் நிறைவடைந்ததும், பிரதமர் மோடி நார்வே நாட்டுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.
அவரை, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். சமீபத்தில் ஐரோப்பிய தடையற்ற வர்த்த கூட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே புவிஅரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான முக்கிய நடவடிக்கையாக பிரதமர் மோடியின் இந்த பயணம் பார்க்கப்படுகிறது.
40 ஆண்டுகளில் முதன்முறையாக நார்வே சென்ற இந்திய பிரதமரின் முதல் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 5-ம் அரசர் ஹரால்டு மற்றும் அரசி சொஞ்சா ஆகியோரை நேரில் சந்தித்து பேச உள்ளார். அதனுடன், நார்வே பிரதமர் ஸ்டோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்த பயணத்தில், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், இரு நாடுகளின் உறவுகளில் உள்ள வளர்ச்சியை அவர் மறுஆய்வு செய்கிறார். அவற்றை இன்னும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் அவர் ஆராய உள்ளார்.
இதேபோன்று, இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாடு நாளை ஆஸ்லோ நகரில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், நார்வேயின் உயரிய கவுரவம் என கூறப்படும் கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வீஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. நார்வே 5-ம் அரசர் ஹரால்டு இதனை வழங்கினார்.
இது உலக அளவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 32-வது பெரிய கவுரவம் ஆகும். இதற்கு முன்னர் சுவீடனில் அவருக்கு, அந்த நாட்டின் உயரிய, ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ் என்ற சிறப்புமிக்க விருது நேற்று வழங்கப்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சுவீடன் மற்றும் நார்வே என இரு நாடுகளிலும் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.