உலக செய்திகள்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அலி காமேனியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற போக்குவரத்து மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் மோதல்

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் திடீரென போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரான் உச்சபட்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதற்கிடையில் அமெரிக்காவும், ஈரானும் கடந்த ஜூன் 17-ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்குவது, அப்பகுதியில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது, பொருளாதார தடைகளில் இருந்து நிவாரணம் அளிப்பது, ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான விவகாரத்திற்குத் தீர்வு காண 60 நாள் காலக்கெடு வழங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி, அமெரிக்கப் படைகள் ஈரான் ராணுவ படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் தாக்கியது.

பதற்றமான சூழல்

இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த நிலையில், அமெரிக்காவின் எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கையும் பேச்சுவார்த்தைகளை முழுமையாக நிறுத்திவிடும் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பிரதமர் மோடிக்கு அழைப்பு

இந்த சூழலில், போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு வரும் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைபேசியில் உரையாடல்

இந்நிலையில், பிரதமர் மோடி ஈரான் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் உரையாடினேன். பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்றதுடன், தொடர்ச்சியான முயற்சிகள் மத்திய கிழக்கு பகுதியில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தேன். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து இந்தியாவிற்கும், உலகத்திற்கும் முக்கியமானது என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்” என்று பதிவிட்டுள்ளார்.