ரோம்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ, 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணங்கள் தொடர்பான தகவலை வாடிகன் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொனாக்கோ, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்குவடோரியல் கினியா ஆகிய 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் போப் லியோ சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் போப் ஆண்டவராக லியோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 2025-ம் ஆண்டில் வாட்டிகனுக்கு வந்த சுமார் 3 கோடியே 30 லட்சம் யாத்ரீகர்களுக்கான பிரார்த்தனை கூட்டங்களை நடத்துவதற்காக அவரது சுற்றுப்பயணம் பெரும்பாலும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, 70 வயதான போப் லியோ தனது சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தற்போது தயாராகி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.