ரோம்,
தனது புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரார்த்தனை செய்த நலம் விரும்பிகளுக்கு போப் லியோ நன்றி தெரிவித்துள்ளார்.
போப் 14-ம் லியோ (வயது 71) கடந்த 11-ந்தேதி வாடிகன் புனித பேதுரு பேராலயத்தில் நடந்த ஞாயிறு வழிபாட்டின்போது, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதாவது தனது நுரையீரலில் கட்டி உருவாகி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
1½ மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், அதைத்தொடர்ந்து இரவை அவர் அமைதியான முறையில் கழித்ததாகவும் ஜெமெல்லி ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. போப் ஆண்டவரின் அகற்றப்பட்ட நுரையீரலின் பகுதி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோயின் தீவிரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும் என வாடிகன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனது புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரார்த்தனை செய்த நலம் விரும்பிகளுக்கு போப் லியோ நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உங்களுக்கு தெரிந்தபடி, இந்த நாட்களில் என்னால் உங்களுடன் இருக்க முடியவில்லை. உங்கள் பிரார்த்தனைகளுக்கும், நீங்கள் இணைந்து செய்த பணிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும், கவனமாகக் கேட்பதும் உண்மையில் முழு திருச்சபைக்கும் ஒரு வரமாகும். தங்கள் மகிழ்ச்சிகள், போராட்டங்கள் மற்றும் நம்பிக்கைகளை பற்றி பேசிய குடும்பங்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.