புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரு நாடுகளின் உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நேரடி சந்திப்புகள் குறைந்தன. இந்த நிலையில், டெல்லியில் வருகிற 12, 13-ந்தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் போது பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் தனியாக சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நடந்தால், 2020-ம் ஆண்டு கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியாவில் இரு தலைவர்களும் நடத்தும் முதல் இருதரப்பு சந்திப்பாக அது அமையும்.
மோடி- ஜின்பிங் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சினை, அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் நிலவரம், வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கல்வான் மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தை படிப்படியாக தணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லையில் ராணுவ பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களின் நேரடி சந்திப்பு இந்தியா-சீனா உறவில் முக்கிய திருப்பமாக அமையலாம் என்று கருதப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பிறகு 2020-ம் ஆண்டு கல்வான் மோதல் ஏற்பட்டதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளும் உறவை சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்றிருந்த நிலையில், தற்போது ஜின்பிங் இந்தியா வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவது உறுதியானால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய பேச்சுவார்த்தையாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.